India
’டெல்லி அரசுக்கே அதிகாரம்’.. ஒன்றிய அரசுக்குக் குட்டு வைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!
டெல்லியில் 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்தே டெல்லி அரசின் முடிவுகளில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாகத் தலையிட்டு வருகிறது. இதனால் ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
மேலும் 2019ம் ஆண்டு டெல்லி அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என நீதிபதி பூசன் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து ஒன்றிய அரசின் அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கி இருப்பது டெல்லி அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. நீதிபதிகளின் தீர்ப்பில்,"2019ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சட்டப்பேரவைகளில் சட்டம் நிறைவேற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசு கூட்டாட்சியின்படியே இயங்குகிறது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் அங்கம். ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களில் மட்டுமே ஒன்றிய அரசு தலையிடும் அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் அமைச்சர்களின் உத்தரவைச் செயல்படுத்துவதைத் தடுத்தால் கூட்டுப் பொறுப்பு பாதிக்கப்படும்.
சட்டமன்ற அதிகாரத்துக்கு வெளியே உள்ள சில அம்சங்களில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும். மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் இருக்க வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!