India

சாலை விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் சகோதரர்.. மருத்துவமனையில் அனுமதி: போலிஸ் விசாரணை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹாலாத் மோடி. இவர் கடந்த 27ம் தேதி தனது மகன் மற்றும் மருமகளுடன் பந்திப்பூருக்குச் காரில் சென்று கொண்டிருந்தார். பின்னர் கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கார் சென்றபோது சாலையில் இருந்த டிவைட்டரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் உடனே நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹாலாத் மோடியை மைசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குச் சிறு காயங்கள் மட்டுமே உள்ளது என்றும் அபாய கட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

அதேபோல், பிரஹலாத் மோடியின் பேரன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மைசூர் ஜே.ஸ்.எஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்குத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த அடுத்தநாள் தான் பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி ஒன்றிய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'அரசைத் தான் விமர்சனம் செய்கிறேனே தவிர எனது சகோதரரை அல்ல' என்று ஒரு முறை பிரஹலாத் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிரஹலாத் மோடி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.

Also Read: "வாலாட்டியவர்கள் வாலை ஒட்ட நறுக்கிய வரலாறு திமுக-வுக்கு உண்டு.. வாய் நீளம் வேண்டாம் நட்டா?" : சிலந்தி!