India

மீண்டும் இந்தியாவில் பரவும் கொரோனா தொற்று.. என்ன செய்யப்போகிறது ஒன்றிய அரசு?

2019ம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமே இதுவரை காணாத இந்த புதிய தொற்றைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளே திணறின.

பின்னர் உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைப்போடு ஊரடங்கு, முகக்கவசம் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தினர். இதையடுத்து வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இருந்தபோதும் கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து விட்டு தங்கள் வீட்டிலேயே ஒரு சிறை கைதுபோல் இருந்துவந்தனர்.

தற்போதுதான் உலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்துள்ளது. இரண்டு வருடங்களாக சமூக இடைவெளி, முகக்கவசம் என வாழ்ந்துவந்த மக்கள் தற்போதுதான் அதிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது. சீனாவில் கடந்த இரண்டு வாரங்களாகவே பொதுமக்கள் அதிகமாக மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

அங்கு ஒமிக்ரான் பி.எப் 7 என்ற கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஒமிக்ரான் பி.எப்.7 மற்றும் பி.எப்.12 ஆகிய 2 வகை புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்தியாவில் புதிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதேபோல் டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் முகக்கவசம் அணிந்து கொண்டே கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளனர். இதனால் மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் வருமான? என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Also Read: “இடஒதுக்கீடு வேண்டும்.. இல்லை, தேர்தலில் பதிலடி கொடுப்போம்”: பாஜகவுக்கு லிங்காயத் சமூகத்தினர் எச்சரிக்கை!