India

இனி போன் வந்தால் 'ஹலோ' என்று கூறக்கூடாது..'வந்தே மாதரம்' என்றுதான் கூறவேண்டும் -மஹாராஷ்டிர அரசு உத்தரவு !

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அதன் முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். ஆனால் சிவசேனாவின் இருந்த அதிருப்தி அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவை வைத்து பா.ஜ.க அரசியல் ஆட்டம் ஆடியது.

சிவசேனா எம்.எல்.ஏக்களை வளைத்த ஏக்நாத் ஷிண்டே, அவர்களை அசாம் அழைத்து சென்று தங்க வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது.அதன்பின்னர் ஏக்நாத் ஏக்நாத் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிர அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு, `ஹலோ' என்று கூறாமல் `வந்தே மாதரம்' என்று கூறவேண்டும் என்ற அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதமே, அமைச்சர் சுதிர் முங்கந்திவார் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதற்கான சுற்றறிக்கையை, மாநில பொது நிர்வாகத் துறை நேற்று வெளியிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து அழைப்புகளைப் பெறும்போது, `ஹலோ' என்பதற்கு `வந்தே மாதரம்' என்று கூறவேண்டும். மேலும் இது அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

மேலும், அந்த சுற்றறிக்கையில், 'ஹலோ' என்ற வார்த்தை அர்த்தமற்றது என்றும், 'வந்தே மாதரம்' என்று உரையாடலைத் தொடங்குவது நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க உதவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.மகாராஷ்டிரா அரசின் இந்த புதிய உத்தரவை பா.ஜ.க பாராட்டியுள்ளது. ஆனால் பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த அறிக்கையை விமர்சித்திருக்கின்றனர். சமாஜ்வாடி கட்சி இதனை, `மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக-வின் மற்றொரு முயற்சி. பா.ஜ.க-வின் அழுத்தத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடிபணிந்துவிட்டார்' என்று விமர்சித்துள்ளது.

Also Read: "அதிமுக கூட்டத்துக்கு இலவசமாக பிரியாணி தரவேண்டும்" -பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர் !