India

விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட கணவர்.. மனைவி செய்த செயலால் டாக்டர் உட்பட 4 பேர் கைது: தெலங்கானாவில் அதிர்ச்சி

தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியில் உள்ள பொப்பரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜமால் சாஹேப். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இமாம்பி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவர்களது மகளுக்கு ஆந்திராவில் அண்மையில் திருமணமானது. இதனால் தனது மகளை சந்திக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இமாம்பி ஆந்திராவுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து கணவன் ஜமாலும் நேற்று காலை தனது மகளை காண பைக்கில் சென்றபோது, வழியில் மர்ம நபர் லிப்ட் கேட்டுள்ளார். ஜமாலும் அவரிடம் மறுப்பு தெரிவிக்காமல் லிப்ட் கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரும் சென்றுகொண்டிருக்கும் போகும் வழியிலே பின்னால் அமர்ந்திருந்த லிப்ட் கேட்ட மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த ஊசியை எடுத்து அவரை குத்திவிட்டு இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து ஜமால் கீழே விழுந்து மயக்கமடைந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டதால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜமாலின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது மனைவி இமாம்பியிடம் தொடர்ந்து விசாரித்தபோது, அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது இமாம்பிக்கும் சிந்தகனி பகுதியை அடுத்துள்ள மட்கே பள்ளி நாமவரா என்ற பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் என்பவருக்கும் இடையே காதல் இருந்துள்ளது என்றும், இவர்கள் காதல் விவகாரம் கணவர் ஜமாலுக்கு தெரிய வரவே இருவரையும் கண்டித்துள்ளதும் தெரியவந்தது.

மேலும் தங்களது காதலுக்கு கணவர் ஜமால் தடையாக இருப்பதால் அவரை சந்தேகத்திற்கு அப்பால் கொலை செய்ய எண்ணியவர்கள் இது போன்ற திட்டத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தீட்டியுள்ளதும், அதன்படி சம்பவத்தன்று மருத்துவர் லிப்ட் கேட்டு அவரை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து இதில் தொடர்புடைய காதலன் மோகன், மனைவி இமாம்பி, விஷ ஊசி கொடுத்த மருத்துவர், மருத்துவரின் உதவியாளர் என மொத்தம் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மனைவியே கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிக்கொடுத்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கர்நாடகா : பெற்ற பிஞ்சு குழந்தையை ரூ.50,000-க்கு விற்ற தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்..