India

பள்ளியில் உணவு பரிமாறிய பட்டியலின சிறுமிகள்.. உணவை தூக்கியெறிய சொன்ன சமையல்காரர்..ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு லாலா ராம் குஜார் என்பவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். அங்கு வழக்கம் போல மதிய உணவு நேரத்தில் உணவு பரிமாறப்பட்டுள்ளது.

இந்த உணவை அங்கிருந்த இரண்டு பட்டியலின சிறுமிகள் மாணவர்களுக்கு பரிமாறியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சமையல்காரர் லாலா ராம் குஜார் அந்த பட்டியலின சிறுமிகளை திட்டிவிட்டு உணவருந்திக்கொண்டிருந்த பிற மாணவர்களை அந்த உணவை தூக்கிவீச சொல்லியுள்ளார்.

அதன்படி சில மாணவர்களும் உணவை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தால் மனஉளைச்சல் அடைந்த பட்டியலின சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் தங்கள் உறவினர்களோடு பள்ளிக்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட சம்மந்தப்பட்ட சமையல்காரர் லாலா ராம் குஜார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் பள்ளிகளில் தொடர்ச்சியாக இது மாதிரியான சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடராமல் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: "ராஜா தனது நண்பர்கள் சம்பாதிக்க ஓய்வில்லாமல் உழைக்கிறார்" - மோடியை காட்டமாக விமர்சித்த ராகுல் காந்தி !