India

"எங்கள் நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம்" - கர்நாடக முதல்வருக்கு IT நிறுவனங்கள் எச்சரிக்கை !

கர்நாடக தலைநகரான பெங்களூரு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளன.

இந்த நிலையில், பெங்களுருவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அதிலும் நகரில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைந்துள்ளது.

இந்த பகுதி முழுவதும் தற்போது மழை நீரால் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் போதிய சாலை வசதியும் இல்லாததால் அலுவலக நேரத்தில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது.

இது தவிர கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையில் தேங்கிய நீர் காரணமாக அந்த பகுதியில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தரமான வகையில் மழைநீர், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றால் தங்களது நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம் என அந்த பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: பள்ளியில் உணவு பரிமாறிய பட்டியலின சிறுமிகள்.. உணவை தூக்கியெறிய சொன்ன சமையல்காரர்..ராஜஸ்தானில் அதிர்ச்சி!