India

மின் கம்பத்தில் உரசிய கொடி கம்பம் - தேசியக்கொடி ஏற்றிய முதியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி !

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகரைச் சேர்ந்த அப்துல் கயூம் (72) என்பவர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டு மாடியில் கொடியேற்ற முடிவு செய்து, இதற்காக இரும்பு கம்பியில் தேசிய கொடியை கட்டி ஏற்ற முயன்றார்.

ஏதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியானது, வீட்டினருகே செல்லும் மின்கம்பியில் உரசியது. இதில் அப்துல் கயூம் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுபற்றி லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர் தகவல் தந்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் லாஸ்பேட்டை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றிய முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம்? - சென்னை உயர் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு : காரணம் என்ன?