India
இனி கண்ட நேரத்தில் போன் செய்யக்கூடாது..கடன் ஏஜென்ட்களுக்கு எச்சரிக்கை ! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு என்ன?
இந்தியாவில் அரசு, தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் கடனை திரும்ப வசூல் செய்ய பல்வேறு முறைகளை பயன்படுத்தி வருகின்றன. இதில் சில நிறுவனங்கள் கடனை திரும்ப கொடுக்க ஏஜென்டுகளை நியமனம் செய்து அவர்கள் மூலம் கடனை வசூல் செய்து வருகின்றன.
ஆனால், இந்த ஏஜென்டுகள் பலர் கடன் வாங்கியவர்களை தவறாக பேசுவதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதும் நடந்து வருகிறது. இதன் காரணமாக கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. மேலும் ஏஜென்டுகளின் இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து "வரும் காலங்களில் கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகள் மோசமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது. இதனால் கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகளின் மோசமான நடவடிக்கை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைத்து கடனை செலுத்துமாறு கேட்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது.கடன் தவணையை செலுத்துமாறு, இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!