India

குடியரசுத் தலைவர் தேர்தலில் 15 MPக்கள் போட்ட ஓட்டு செல்லாது: பயிற்சி போதவில்லையோ என இணையவாசிகள் கிண்டல்!

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், பா.ஜ.க கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டனர். இருவரும் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடந்த 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 771 எம்.பி.,க்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏ.,க்களில் 3,991 பேரும் தங்கள் வாக்கை செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. எம்.பி.,க்களின் ஓட்டுக்கு தலா 700 புள்ளியும், மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பும் கணக்கிடப்படும்.

இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக ராஜ்யசபா செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், மொத்தமுள்ள 748 எம்.பி., ஓட்டுகளில், திரவுபதி முர்முவுக்கு 540 ஓட்டுகள் கிடைத்தது. இதன் மதிப்பு 3,78,000 எனவும், யஷ்வந்த் சின்ஹாவுக்கு 208 ஓட்டுகள் கிடைத்தது. இதன் மதிப்பு 1,45,600 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது்.

இதனிடையே 15 எம்.பிக்களின் ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தேர்தலுக்கு முன்னர் அனைத்து கட்சிகளின் சார்பில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏகளுக்கு வாக்களிக்கும் முறை குறித்து பாடம் எடுக்கப்படும். அப்படி இருக்கும் நிலையில், மிகவும் எளிய செயலான ஓட்டளிக்கும் விஷயத்தில் 15 எம்.பிக்கள் தவறு செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "பா.ஜ.க.வில் தலித் தலைவர்களுக்கு மரியாதை இல்லை" -உ.பி. யோகி அரசில் இருந்து அமைச்சர் ராஜினாமா!