India

வெடிகுண்டு தயாரித்து கொரியரில் அனுப்பிய மாணவன்-நீட் பயிற்சியின் போது இன்ஷூரன்ஸ் பணத்துக்கு போட்ட ப்ளான்!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர், ஒரு பார்சலை கொரியர் மூலம் வேறு முகவரிக்கு அனுப்பியுள்ளார். அப்போது கொடுக்கப்பட்ட விவரங்களில் இந்த பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு 9.81 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பார்சலுக்கு இன்ஷூரன்ஸும் செய்துள்ளார். இந்த இன்ஷூரன்ஸ் மூலம், நாம் அனுப்பும் பொருளுக்கு எதாவது ஒரு சேதாரம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை அந்த கொரியர் நிறுவனம் நமக்கு திருப்பி கொடுக்கும். அதனால், அந்த மாணவர், அவர் அனுப்பிய பொருளுக்கு இன்ஷூரன்ஸ் போட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த பார்சல் கொரியர் நிறுவனத்தில் இருக்கும்போதே திடீரென்று வெடித்து லேசாக தீப்பிடித்தது. இதையடுத்து அந்த நிறுவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தது. தகவலின் பேரில், வந்து விசாரித்த காவல்துறையினர், இதை யார் அனுப்பினார் என்று கண்டுபிடித்தனர்.

அதனடிப்படையில், அனுப்பப்பட்ட முகவரிக்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் விசாரணைக்கு மறுத்த அவர், பிறகு காவல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். அப்போது நடைபெற்ற விசாரணையில், பார்சலில் வெடிகுண்டு அனுப்பி வைத்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் இதனை தான் கொரியர் நிறுவனம் அளிக்கும் இன்ஷூரன்ஸ் பணத்துக்காக செய்ததாகவும் கூறினார்.

அதோடு, இந்த வெடிகுண்டை Youtube பார்த்து செல்போன், கம்ப்யூட்டர் பிராஸஸர், வயர், மெமரி கார்டு போன்றவற்றையும் பயன்படுத்தி தயாரித்ததாகவும் கூறினார். மேலும் பார்சலில் அனுப்பப்படும் பொருட்கள் சேதமடைந்தால் அதற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தான் ஒரு ஆன்லைன் விளம்பரத்தில் பார்த்ததால் இப்படி செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மாணவர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 7 வயது சிறுவனை கொலை செய்த 5 மாணவர்கள்.. டி.வி. சீரியலை பார்த்து கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் !