India

கனமழையால் ரயில் ரத்து.. மாணவருக்கு TAXI புக் செய்த அதிகாரிகள்.. இப்படியெல்லாம் செய்யுமா இந்திய ரயில்வே?

சென்னை ஐ.ஐ.டி-யில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் சத்யம் காத்வி. இவர் குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் வசித்து வருகிறார். தற்போது சென்னை ஐ.ஐ.டி-யில் தேர்வு நடைபெறவுள்ளதால் அதில் பங்கேற்க ஏக்தா நகரிலிருந்து வதோதராவுக்கு ரயிலில் வந்து அங்கிருந்து சென்னை வர திட்டமிட்டுள்ளார்.

ஆனால், கனமழை காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் இவர் பயணம் செல்ல வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தன் நிலை தொடர்பாக அவர் இந்திய ரயில்வேக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அவரின் நிலையை புரிந்துகொண்ட ரயில்வே நிர்வாகமும், அவருக்காக ஏக்தா நகரிலிருந்து வதோதராவுக்கு ஒரு டாக்ஸியை புக் செய்து கொடுத்துள்ளது. அதன்படி அந்த டாக்ஸியில் அவர், வதோதராவுக்கு வந்தபின்னர் அங்கிருந்து அவர் சென்னை ரயிலை பிடிக்க ரயில்நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள சத்யம் காத்வி, வதோதரா ரயில் நிலையத்தை அடைந்ததும் ரயில்வே அதிகாரிகள் எனக்கு உதவ தயாராக இருந்தனர் என்றும், பிளாட்பார்ம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் ரயில்வே அதிகாரிகள் பிளாட்பாரத்தை அடைய உதவினர் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தான் கொண்டுவந்த பொருள்களை கூட அவர்கள் எடுத்துச் சென்றனர் என்றும் இந்த உதவியை செய்த ரயில்வேக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் ரயில்வே நிர்வாகத்தின் இந்த செயலை பாராட்டியுள்ளனர்.

Also Read: “அரிசிக்கு 5% GST.. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : கொந்தளிக்கும் பொதுமக்கள் !