India

தவறுதலாக ACCOUNT-ல் விழுந்த ரூ.7 லட்சம்.. லாட்டரி பணம் என்று போலிஸை ஏமாற்ற முயன்ற நபர்.. பின்னணி என்ன?

இணையம் பெருகியுள்ள இந்த தருணத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. ஆனால், அதே அளவு சிறிய தவறுகளை செய்து பணத்தை இழக்கும் நிலையும் இப்போது பெருகி வருகிறது. அதைப்போன்ற ஒரு சம்பவம்தான் தற்போது மும்பையில் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பர் ஒருவருக்கு அவசரமாக ரூ.7 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் சம்மந்தப்பட்ட நபருக்கு சென்று சேராமல் இருந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக அவர் சோதித்துப்பார்த்தபோது தவறுதலாக வேறு ஒருவருக்கு ரூ.7 லட்சம் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக சுதாரித்த அந்த பெண் வங்கிக்கு சென்று இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் வங்கி எந்த உதவியும் செய்யமுடியாது என்றும், போலிஸில் புகார் அளிக்கும் படியும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலிஸாருக்கு அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் பேரில் விசாரணை நடத்திய போலிஸார், வங்கிக்கணக்கை வைத்து அந்த நபரை தொடர்புகொண்டுள்ளனர்.

அதற்கு அந்த ரூ.7 லட்சம் லாட்டரியில் விழுந்த பணம் என்றும் அதை திரும்ப கொடுக்கமுடியாது என்றும் அந்த நபர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு பின்னர் நிலைமையை எடுத்துக்கூறிய போலிஸார், பணத்தை திரும்ப தரவில்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்பின்னரே அந்த நபர் பணத்தை திரும்ப கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறியபடி அந்த பணம் இரண்டு நாளில் திரும்ப கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தை விழிப்புணர்வுக்காக போலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Also Read: பெற்ற மகனை கடத்திச் சென்ற தந்தை.. இரண்டு மாநில போலிஸூக்கு அலர்ட் - விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!