India

“சமஸ்கிருதம், பகவத் கீதை பாடங்களை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும்” : குஜராத் அரசுக்கு ஆர்டர் போடும் RSS !

தேசியக் கல்வி கொள்கையின் ஒருபகுதியாக, ஒன்றாம் வகுப்பு முதலே சமஸ்கிருதத்தை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை வழங்கியிருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

சமஸ்கிருதம் படிக்காதவர்கள், பி.ஏ.எம்.எஸ் எனப்படும் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படிப்புகளில் சேருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே சிறுபான்மையினர், தலித் மக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு விரோதமான சட்டங்களை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது.

பணமதிப்பிழப்பு துவங்கி, புதிய வேளாண் சட்டம் வரை பா.ஜ.கவின் ஏழு ஆண்டு ஆட்சியில் மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். 'நீட்' தேர்வைக் கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவைச் சிதைத்தது போதாது என்று, பள்ளி - உயர்கல்வி செல்லும் மாணவர்களின் கனவையும் குழிதோண்டிப் புதைக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளது.

நாடுமுழுவதும் இந்தப் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்ததிலிருந்து தற்போது வரை இத்திட்டத்திற்குப் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசியக் கல்வி கொள்கையின் ஒருபகுதியாக, ஒன்றாம் வகுப்பு முதலே சமஸ்கிருதத்தை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு ஆர்எஸ்எஸ் ஆலோசனை வழங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்துவது குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரதிநிதிகள் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மூத்த பிரதிநிதிகள், கடந்த ஏப்ரல் மாதம், குஜராத் கல்வியமைச்சர் ஜிதுவகானி, குஜராத் கல்வித்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் ரத்னாகர் ஆகியோருடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு சமஸ்கிருதம், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றைக் கொடுக்கொடுக்கவும், வேதக் கணிதம், மற்றும் வேதங்களின் அடிப்படையில் மதிப்புக் கல்வியை வழங்கவும் அரசு முன்வரவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளின் 20 பிரதிநிதிகள் பாடம் எடுக்க நியமிக்க வேண்டும் என்றும் சமஸ்கிருதத்திற்கு ஒரு வாரத்தில் குறைந்தது ஆறு பாடவேளைகளை கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குஜராத் அரசு, கடந்த மூன்று ஆண்டு களாகவே சமஸ்கிருதத்தைக் கற்பிக்கும் திட்டங் களை ஊக்குவித்து வருகிறது. உதாரணமாக, 2019-ஆம் ஆண்டில் குஜராத் சமஸ்கிருத கல்வி வாரியத்தை துவங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.

Also Read: பைக்கில் சென்ற பெண்ணின் தலையில் விழுந்த தேங்காய்.. இணையத்தில் வலம்வரும் அதிர்ச்சி வீடியோ!