India

இறைச்சி இயந்திரம் மூலம் தங்க கடத்தல்.. விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரபல படத்தயாரிப்பாளர்!

வெளிநாடுகள் வழியே இந்தியாவுக்கு முறையான வழியில் தங்கள் கொண்டுவந்தால் அதற்க்குரிய வரியை செலுத்த நேரிடும். இதன் காரணமாக பலர் கடல் வழியாகவும், ஆகாய வழியாகவும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி வருகின்றனர். அதில் பலர் சோதனையில் சிக்கினாலும், சிலர் சாமர்த்தியமாக தங்கம் கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்தின் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு விமானத்தில் வந்த பொருள்களை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.

அப்போது கொச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வந்த இறைச்சி வெட்டும் இயந்திரம் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அதைப்பிரித்து பரிசோதனை செய்தபோது அதில் ரகசிய பாகம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் 2.33 கிலோ தங்கம் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தியபோது கொச்சியைச் சேர்ந்த ஷாபின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், மலையாள திரையுலகின் பிரபல படத்தயாரிப்பாளர் சிராஜூதினுக்கு இந்த தங்க கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சிராஜூதினுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று துபாயில் இருப்பதும் இந்த நிறுவனத்தில் இருந்து இறைச்சி வெட்டும் இயந்திரத்தின் மூலம் ரகசியமாக தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.

இதை அறிந்த போலிஸார் துபாயில் இருந்த சிராஜூதினை சர்வதேச போலிஸ் உதவியுடன் கொச்சிக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வரவழைத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கணவர்களே உஷார்.. “பொம்மையை திருமணம் செய்து குழந்தை பெற்ற இளம்பெண்” : காரணம் என்ன தெரியுமா?