India

மிரட்டல் விடுத்த இந்துத்துவ கும்பல்.. மிரளாமல் பதிலடி கொடுத்த சாய்பல்லவி.. நடந்தது என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, வலதுசாரி அமைப்புகள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்து வரவேற்றன. அதேநேரத்தில் வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மற்ற சில அமைப்புகள் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கும் சாய் பல்லவி தனது அடுத்த படமான 'விரத பர்வம்' படத்தின் விளம்பரத்திற்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில், "தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?" என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “என்னுடைய குடும்பம் எனக்கு நல்ல மனிதனாக இருக்க கற்றுக் கொடுத்தார்கள். ஒடுக்கப்பட்டோர் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் பேசினார். இவரின் இந்த கருத்து இந்துத்துவ அமைப்புகள் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும் சாய்பல்லவிக்கு ஆதரவாகவும் பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சாய்பல்லவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்த பிறகு, அதன் இயக்குநருடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த சம்பவத்தால் இன்னும் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் தலைமுறையினரின் அவலங்களைப் பார்த்து நான் கலங்கினேன். இனப்படுகொலை போன்ற ஒரு சோகத்தை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன். அதே நேரம், கோவிட் காலங்களில் நடந்த கும்பல் கொலை சம்பவத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ளமுடியவில்லை.

பலர் கும்பல் படுகொலை சம்பவங்களை சமூக வலைதளங்களில் நியாயப்படுத்துகிறார்கள். எல்லாமே உயிர் தான், எல்லா உயிர்களும் முக்கியம் தான் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு நடுநிலையானவள், என் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவள். முதன்முறையாக உங்களிடம் இப்படிப் பேசுகிறேன். நான் சொன்னதை எப்படி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்." என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி நடிகை சாய்பல்லவிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “காஷ்மீர் சட்டப்பிரிவு 370 குறித்து அம்பேத்கர் என்ன சொன்னார் தெரியுமா ?” : மாயாவதிக்கு டி.ராஜா பதில் !

Also Read: “பசுவுக்காக இஸ்லாமியர் கொல்லப்படுகிறார்கள்” : ‘காஷ்மீர் பைல்ஸ்’ குறித்து நடிகை சாய் பல்லவி பேசியது என்ன?