India

“மீதி வரியை குறைத்துவிட்டு பிறகு நீதிபோதனை செய்யுங்கள்”: மோடி அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தும் தாமஸ்ஐசக்!

ஒன்றிய பா.ஜ.க அரசு, பெட்ரோல் - டீசல் மீதான மத்திய எக்சைஸ் வரியை குறைத்து அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியில் குறைத்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோலுக்கான கலால் வரியில் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதன்மூலம் பெட்ரோல் விலை ரூ.9.50 ம், டீசல் விலை ரூ.7.50 ம் குறையும் எனக் கூறப்பட்டது. மேலும் இதனால் ஒன்றிய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் மாநில அரசுகளும் ஒன்றிய அரசு போல “கருணை” காண்பித்து வரிகளை குறைக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

உண்மையில் அடுத்தடுத்து கடுமையாக உயர்த்தப்பட்ட கலால்வரியின் ஒருபகுதியைத் தான் மோடி அரசு குறைத்துள்ளதாகவும் ஆனால் தினந்தோறும் வரியை குறைத்து நஷ்டத்தை அரசாங்கம் சந்திப்பது போன்ற போலியான நடகத்தை ஒன்றிய அரசு மேற்கொள்வதாக அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மோடி அரசு கடந்தகாலங்களில் சுமார், ரூ.27 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திவிட்டு, ஒன்றிய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை என இடதுசாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, மே 2014 இல் மோடி முதன் முறை பதவி ஏற்றபோது எக்சைஸ் வரிகள், பெட்ரோலுக்கு ரூ 9.48ம், டீசலுக்கு ரூ.3.56ம் இருந்தது. அதனால் அன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41, டீசல் விலை ரூ.55.49 விற்கப்பட்டது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்றபிறகு, தற்போது பெட்ரோல் 43 சதவீதமும், டீசல் விலைகள் 69 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மோடி அரசின் விலைக்குறைப்பு நாடகத்தை கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் மீதான மத்திய வரி ரூ 9.48 ஆகவும், டீசலுக்கு ரூ 3.56 ஆகவும் இருந்தது. ஆனால், மோடி அரசு பெட்ரோல் மீது ரூ 26.77, டீசல் மீது ரூ 31.47 என 12 முறை வரி உயர்வு செய்துள்ளது.

இந்த கடும் விலைவாசி உயர்வுக்கு பிறகும் பெட்ரோல், டீசல் மீதான உயர்த்தப்பட்ட வரியை முழுமையாக திரும்பப் பெற ஒன்றிய அரசு தயாராக இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 12.27, டீசல் மீது லிட்டருக்கு ரூ10.47 என மோடி அரசு உயர்த்தியுள்ள வரிகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இதிலிருந்து கவனத்தை திசை திருப்ப, வரியை உயர்த்தாத மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். முதலில் உயர்த்தப்பட்ட மீதி வரியை குறைத்துவிட்டு பிறகு, நீதிபோதனை செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தமிழ்நாடு மனிதவள மேம்பாடு மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் வரியை உயர்த்துவதும், மாநில அரசுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக செயல்படுவதும் தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”மோசமாக செயல்படுவோரின் அறிவுரைகள் எங்களுக்கு தேவையில்லை” - ஒன்றிய அரசுக்கு அமைச்சர் PTR பொளேர் பதிலடி!