India

2 பல்புக்கு ரூ.2.5 லட்சம் கரண்ட் பில்லா ?.. மின்சார கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெயிண்டர்!

அரியானா மாநிலம், ஃபதேஹாபாத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதற்குக் காரணம் அவரது குடிசை வீட்டில் 2 மின் விசிறிகள் மற்றும் 2 பல்புகள் மட்டுமே உள்ளது. இந்த நான்கு பயன்பாட்டிற்கு மட்டும் எப்படி ரூ.2.5 லட்சம் வந்தது என்றும் இவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்டுவது என குழப்பத்தில் உள்ளார்.

இது குறித்து பிரேம் குமார், "நான் பெயிண்டராக வேலை செய்கிறேன். நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் ரூ.300 கிடைப்பதே பெரிய விஷயம். என் வீட்டில் 2 பல்புகள், 2 மின்விசிறிகள் மட்டுமே உள்ளன.

எங்கள் வீட்டிற்கு இதுவரை ரூ.400 வரை மின்கட்டணம் செலுத்தி வந்தேன். ஆனால் கடந்த 6 மாதங்களில் மூன்று முறை மின்சாரத்துறையில் இருந்து பில் அனுப்பினர். ஆனால் தற்போது அனுப்பிய பில்லில் ரூ. 2.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரேம் குமார் மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் இருக்கும் மின் மீட்டர் ஆய்வு செய்து மீண்டும் சரியான மின் கட்டண ரசீது கொடுக்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “சாப்பிட காசு கேட்ட 6 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை” - மத்திய பிரதேச காவலர் வெறிச்செயல் !