India

“பெட்ரோல் - டீசல் மீது ஒன்றிய அரசு விதித்த அநியாய வரி” : மக்களை கசக்கி பிழிந்து வருவாய் ஈட்டுவது சரியா?

பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி ஏழை எளிய - நடுத்தர மக்கள் மீது ஒன்றிய அரசு மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது என்று தினகரன் நாளேடு தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23.3.2022 தேதிய `தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2008 ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலரை எட்டியிருக்கிறது. உபயம் உக்ரைன்-ரஷ்யா போர். 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தமுடியவில்லை. 137 நாட்களுக்கு இப்போது பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமையல் கேஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2 ஆண்டு கொரோனா தொற்று, வேலை இல்லா திண்டாட்டம், வேலை இழப்பு, தவறான பொருளாதார கொள்கைகள், இப்போது போர் காரணமாக பல்வேறு நெருக்கடிகளால் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் இந்தியா முழுவீச்சில் இயங்க தொடங்கிய நேரம் போர் மேகம் காரணமாக மீண்டும் தவிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறைந்தபட்சம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு தலா ரூ.15 உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. 2017 முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு உயர்த்தப்பட்டு வந்தது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை பேரல் 40 டாலருக்கு சரிந்த போதும் கூட ஒன்றிய அரசு வரியை ஏற்றி பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பின் பயனை மக்கள் அனுபவிக்க விடாமல் வருவாயை பெருக்க பயன்படுத்திக்கொண்டது.

ஆனால், 5 மாநில தேர்தல் கணக்கை கருத்தில் கொண்டு 2021ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படவில்லை. கடந்த மார்ச் 10ம் தேதி தேர்தல் ரிசல்ட் அறிவிக்கப்பட்டாலும் விலை உயர்த்தப்படவில்லை. அதற்கான தருணம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனியும் உயரும். பெட்ரோலிய பொருட்களின் விலை ஒருபக்கம் உச்சத்திற்கு சென்றாலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.1000ஐ எட்டும் அபாயம் உள்ளது. சென்னையில் இப்போது ரூ.967க்கு ஒரு சிலிண்டர் விற்பனைக்கு வருகிறது. இந்த விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. சமையல் சிலிண்டருக்கு தனியாக ரூ.1000 ஒவ்வொரு மாதமும் ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அதே போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாதம் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தவித்துப்போய் இருக்கிறார்கள் மக்கள். மோடி அரசு தொடர்ச்சியாக இந்த 8 ஆண்டுகளில் மக்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதல் ஏராளம். அதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு ஒன்றிய அரசு விதித்த அநியாய வரி முக்கியமானது. அரசுக்கு வரிவருவாய் முக்கியம் தான். அதே சமயம் மக்களை கசக்கி பிழிந்து வருவாய் ஈட்டுவது சரியா? கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதிகரிக்கப்பட்ட வரியை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெற்றாலே இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. வரி வருவாயைவிட மக்கள் நலன் முக்கியம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டிய தருணம் இது.

Also Read: “மக்களைக் காக்க ⇢ ‘நிதிநிலை அறிக்கை’ - மண்ணைக் காக்க ⇢ ‘வேளாண் அறிக்கை’” : முரசொலி தலையங்கம் புகழாரம் !