India

ரூ.300 கோடிக்கு பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய கும்பல்.. கடத்தலுக்காகவே கோர்ஸ் படித்த கான்ஸ்டபிள்!

மஹாராஷ்டிராவில் ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் கிரிப்டோ கரன்சி வைத்திருந்த நபரை கடத்திய போலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 8 பேர் அடங்கிய கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே பிம்ப்ரி-சின்ச்வாட் நகரில் வினய் நாயக் என்பவர், ரூ.300 கோடி மதிப்புள்ள பிட்காயின்களை வைத்திருந்துள்ளார். இதனை அப்பகுதியில் போலிஸ் குற்றப்பிரிவில் பணியாற்றிய கான்ஸ்டபிள் திலிப் துக்காராம் அறிந்துகொண்டு அவரை கடத்த முடிவு செய்தார்.

இதற்காக தன்னுடன் 7 பேரை சேர்த்துக்கொண்டு வினய் நாயக்கை கடந்த ஜன.,14ஆம் தேதி கடத்தியுள்ளார். இது தொடர்பாக வினய் நாயக்கின் நண்பர்கள் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

கடந்த 15 நாட்களாக தேடிவந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்ட கான்ஸ்டபிள் திலிப் துக்காரம் உட்பட 8 பேரை போலிஸார் கைது செய்தனர்.

திலீப் துக்காராம் இந்த கடத்தல் திட்டத்துக்காக, ஆஃபிஸ் ஆட்டோமேஷன், சைபர் க்ரைம் சிஸ்டம்ஸ், மொபைல் ஃபார்ன்சிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் படிப்புகளையும் படித்துள்ளார்.

இதுதொடர்பாக போலிஸ் துணை கமிஷனர் ஆனந்த் போய்ட் கூறுகையில், ‛வினய் நாயக்கை கடத்தி பிட்காயின்களை பறிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர். கைதுக்கு பயந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வினய் நாயக்கை விடுவித்து அருகிலுள்ள பகுதியில் இறக்கிவிட்டார்கள்.

வினய் நாயக்கை பிட்காயின்களுக்காகவே கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.