India

பா.ஜ.க அரசை குட்டிய உச்சநீதிமன்றம்.. “நேருவும் பாகிஸ்தானும் தான் காரணமா?” - நெட்டிசன்கள் கிண்டல்!

பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுக்கு காரணம் எனக் கூறிய உ.பி., அரசு வழக்கறிஞரிடம், ‘பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்துவிடலாமா?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு நான்கு வாரங்களாக விசாரித்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணையின்போது, டெல்லி, என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைக்க 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காற்று தர மேலாண்மை அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது உத்தர பிரதேச பா.ஜ.க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடினார்.

அப்போது உ.பி அரசு வழக்கறிஞர், “டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம். காற்று மாசுக்கும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பான வாதம் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.கவினர் எதற்கெடுத்தாலும் முன்னாள் பிரதமர் நேருவையும், பாகிஸ்தானையுமே குற்றம்சாட்டுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

Also Read: “பா.ஜ.கவினரின் அப்பட்டமான நேரு வெறுப்புக்குக் காரணம் இதுதானா?” - சான்று தரும் புத்தகம்!