India

அடக்கம் செய்யப்பட்டவர் திடீரென திரும்பி வந்ததால் பீதி.. கர்நாடகாவில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்திற்குட்பட்ட சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜப்பா. முதியவரான இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு சில நாட்கள் தங்கியிருந்த அவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து செண்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகே இறந்தவர் ஒருவர் சடலம் இருப்பதாக போலிஸார் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்து பார்த்த நாகராஜப்பாவின உறவினர்கள், உயிரிழந்தது அவர்தான் என அடையாளம் கூறினர்.

பின்னர் போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரது இறுதி நிகழ்ச்சியும் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் நாகராஜப்பா இறந்ததற்கான சான்றிதழையும் உறவினர்கள் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நாகராஜப்பா திடீரென தனது கிராமத்திற்கு வந்துள்ளார். இவரைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து வீதியில் அங்கும், இங்கும் ஓடியுள்ளனர். பிறகு, உறவினர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

குடிபோதையில் வழிதவறி எங்கோ சென்றுவிட்டதாகவும், அங்கு சில நாட்கள் கூலி வேலை செய்துவிட்டு பிறகு கிராமத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ”நெகட்டிவ் வந்தாலும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்” ஒமிக்ரான் குறித்து சென்னை RGGH முதல்வர் விளக்கம்!