India

“சாதிக்க வயது ஒரு தடையல்ல..” - 104 வயதில் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த குட்டியம்மா பாட்டி!

104 வயது மூதாட்டி குட்டியம்மா கேரள மாநில எழுத்தறிவு மிஷன் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற திட்டம் கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது. படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.

இதில் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சியூரைச் சேர்ந்த குட்டியம்மா என்ற 104 வயதான மூதாட்டியும் பயின்று வந்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் பாடம் பயின்று வந்த முதியவர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது.

தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் வகுப்பில் கலந்து கொண்டு கற்றுவந்த குட்டியம்மாவுக்கு வயது முதிர்வு காரணமாக காது கேளாமை பிரச்சனை இருந்தபோதிலும், அதையெல்லாம் தாண்டி இந்தத் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

எழுத்தறிவிற்கான இந்தத் தேர்வில் குட்டியம்மா பாட்டி, 100க்கு 89 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் குட்டியம்மா 4ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளார்.

இந்தத் தகவலை ட்விட்டரில் வெளியிட்ட கேரள கல்வி அமைச்சர் வாசுதேவன் சிவன்குட்டி, “சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்தியுள்ள குட்டியம்மாவிற்கும், புதிதாக படிப்பறிவு பெற்ற மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி மூதாட்டி குட்டியம்மா கூறுகையில், "படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சின்ன வயதிலேயே இருந்தது. ஆனால் அப்போது என்னால் பள்ளிக்குச் படிக்க முடியவில்லை. 104 வயதில் தேர்வு எழுதுவேன் என நான் நினைக்கவில்லை.

எனக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். என் பிள்ளைகள் நீங்கள் படிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அதனால் நான் இன்னும் ஆர்வமாக படித்தேன். இப்போது கேரளத்தில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இறந்த பிறகும் விழிப்புணர்வு”: புனீத் ராஜ்குமார் செயலை தொடர்ந்து மருத்துவமனைக்கு படையெடுக்கும் ரசிகர்கள்!