India

"சாதிச்சிட்டுதான் வீட்டுக்கு வருவோம்.. எங்களை தேடாதீங்க" : கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான 3 சிறுவர்கள்!

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பரிக்ஷத், நந்தன், கிரண் ஆகிய மூன்று மாணவர்களும் சனிக்கிழமையன்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீட்டுக்கு திரும்ப வராததால் அவர்களின் பெற்றோர்கள் பதட்டமடைந்து அக்கம்பக்கம் தேடியும், அவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் மூன்று சிறுவர்களின் பெற்றோர்களும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மூன்று மாணவர்களும் நண்பர்கள் என்றும் தினமும் காலை நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்தன என்றும் இந்நிலையில்தான் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.

பின்னர், போலிஸார் அவர்களின் வீடுகளில் சோதனை செய்தனர்.அப்போது இரண்டு சிறுவர்கள் வீட்டில் அவர்கள் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், “எங்களைத் தேடவேண்டாம். படிப்பை விட எங்களுக்கு விளையாட்டில்தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால், நீங்கள் எங்களை படி படி என கட்டாயப்படுத்துகிறீர்கள். எங்களுக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதில் நாங்கள் சாதித்துவிட்டே வீடுதிரும்புவோம்” என எழுதப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகலகுண்டே மற்றும் சோலதேவனஹள்ளி ஆகிய காவல்நிலைய எல்லைகளில் ஆறு சிறுவர்கள் மற்றும் இளம்பெண் ஒருவரையும் காணவில்லை. ஒரே நேரத்தில் ஏழு பேர் காணாமல் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்களை கண்டுபிடிக்க போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Also Read: “ரயிலில் பான்பராக் போட்டு துப்பும் வட இந்தியர்கள்” : கழுவுவதற்கு ரயில்வேக்கு 1200 கோடி செலவு !