India

“FIR நகலை காட்டுங்க... அப்போதான் உடலை தகனம் செய்வோம்” : பலியான விவசாயிகளின் குடும்பத்தினர் ஆவேசம்!

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் வலுத்ததைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரின் மகன் மீது உத்தர பிரதேச போலிஸ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனிடையே லக்கிம்பூரில் கார் மோதி உயிரிழந்த விவசாயிகளில் லவ்பிரீத் சிங் என்பவரும் ஒருவர். இவர் கார் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது தனது குடும்பத்தைப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த லவ்பிரீத் சிங்கின் உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் லப்பிரீத் சிங்கின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இறந்த விவசாயிகளின் உடல்களைத் தகனம் செய்ய மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: போராடிய விவசாயிகள் மீது கார் ஏறிய திக்திக் நிமிடம்... வெளியான அதிர்ச்சி வீடியோ!