India

Swiggy, Zomato-வில் இனி உணவுப் பொருட்களின் விலை உயரும்.. ஒன்றிய அரசின் முடிவால் பொதுமக்களுக்கு பாதிப்பு!

இந்தியாவில் உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இதுசம்பந்தமான முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி உள்ளது. ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் இணையதள வர்த்தக ரீதியில்தான் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே அதன் அடிப்படையில் இந்த நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை ஜி.எஸ்.டி வரம்புக்குள் உணவு டெலிவரி நிறுவனங்களையும் கொண்டுவந்துவிட்டால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்தும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: ஒரு செங்கலை வைத்து 3 ஆண்டுகள் ஓட்டியாச்சு; இந்த கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகளோ? - மதுரை MP கடும் தாக்கு!