India

படித்த பெண்களாக குறிவைத்து ரூ.3 கோடி சுருட்டிய வாலிபர்... போலிஸில் சிக்கியது எப்படி?

திருமண மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 11 பெண்களிடம் பணம் பறித்த வாலிபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், செட்டிகாலபூடி கிராமத்தைச் சேர்ந்தவர் புன்னட்டி சீனிவாஸ். இவர் மேட்ரிமோனி இணையதளங்களில் தனது விவரங்களைப் பதிவிட்டு, அதிகமாக ஊதியம் வாங்கும் பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்துள்ளார்.

இப்படி 11 பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறியும், கொரோனாவால் நடத்தி வந்த தொழில் நஷ்டம் ஏற்பட்டது என பொய்யான காரணங்களைக் கூறியும் சுமார் 3 கோடி ரூபாய் வரை இவர்களிடம் பணம் பறித்துள்ளார். ஆனால் இவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் இவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் புன்னட்டி சீனிவாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது போலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

Also Read: காதலுக்கு இடைஞ்சல்: சொந்த மகனை பிரம்பால் அடித்து கொலை.. தாயின் வெறிச்செயல் - கிருஷ்ணகிரியில் கொடூரம்!