India
மேட்ரிமோனியில் வரன் தேடும் விவாகரத்தான பெண்களை குறிவைத்து ‘பகீர்’ மோசடி... சிக்கிய நைஜீரிய கும்பல்!
மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும் வசதி படைத்த பெண்களை குறிவைத்து மோசடிகளை அரங்கேற்றி வந்த நைஜீரிய கும்பலை சென்னை போலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விவகாரத்தான பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். மேட்ரிமோனி மூலம் அப்பெண்ணை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனது பெயர் விஜய் எனவும், தான் நெதர்லாந்தில் மருத்துவராக பணிபுரிவதாகவும் தெரிவித்து, தான் ஆப்ரேஷன் செய்வது போன்ற புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.
தனக்கும் விவாகரத்தானதால் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேடி வருவதாகக் கூறி பழகி வந்துள்ளார். நட்பாகத் தொடங்கிய பழக்கம், நாளடைவில் காதலாக மாறி இருவரும் செல்போனில் தினமும் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நபர் லேப்டாப் பரிசு ஒன்றை அப்பெண்ணுக்காக அனுப்பியிருப்பதாக தெரிவித்துள்ளார். சில நாட்கள் கழித்து கொரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகக் கூறி உங்களுக்கு பார்சல் வந்துள்ளது எனவும், பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி தொகை 30 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு பொருளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி அப்பெண்ணும் வங்கிக் கணக்கு மூலமாக பணம் அனுப்பியுள்ளார். ஆனால் லேப்டாப் வந்து சேரவில்லை.
இதேபோல் வைர மோதிரம், தங்க நகை மற்றும் நெதர்லாந்து பணம் 1 கோடி என பரிசு வந்திருப்பதாகவும் பலமுறை ஆசை வார்த்தைகள் கூறி அந்தப் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் மேட்ரிமோனி நிறுவனத்தை அணுகி கேட்டபோது, அது மோசடி கும்பலின் செயல் எனத் தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸில் 4.15 லட்சம் ரூபாய் மோசடி செய்த அந்த நபர் மீது புகார் அளித்தார்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விவகாரத்தான ஆண்கள் மற்றும் பெண்கள் என, கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு பிரபல வங்கியில் கணக்கு தொடங்கி அதன் மூலமாக பணபரிவர்த்தனைகள் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் போலியாக உருவாக்கப்பட்ட மேட்ரிமோனி பெயரைப் பயன்படுத்தியே விவாகரத்தான் ஆண்கள் மற்றும் பெண்களை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த கும்பல் பேச பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து போலிஸார் ஆய்வு மேற்கொண்டபோது, அதன் இருப்பிடம் டெல்லி பகுதி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் தனிப்படை அமைத்து டெல்லி சென்று விசாரித்தனர்.
செல்போன் எண்ணை வைத்து அங்கு பதுங்கியிருந்த 2 நைஜீரியர்களை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ (31) மற்றும் சிலிடஸ் கேஸ்சுக்வு (23) என்பது தெரியவந்தது.
அவர்கள் மேட்ரிமோனி மூலம் மறுமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்ணின் விவரங்களை எடுத்து அவர்களின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு நடித்து பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களின் கூட்டாளிகளான ஒரு பெண் உட்பட இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 15 செல்போன்கள், 4.30 லட்சம் ரூபாய் பணம், 15 ஏ.டி.எம் கார்டுகள், லேப்டாப் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !