India

மாணவிக்கு பாலியல் கொடுமை: கண்ட இடங்களுக்குச் சென்றால் என்ன செய்ய முடியும்? - BJP அமைச்சர் சர்ச்சை பேச்சு!

கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவருடன் சாமுண்டி மலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஆறுபேர்கொண்ட கும்பல் ஒன்று, மாணவரைத் தாக்கிவிட்டு, அந்த பெண்ணை தனியாகத் தூக்கிச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய பாஜக அமைச்சர் அரக ஞானேந்திரா," மாலை நேரத்தில் மாணவருடன் அந்த மாணவி ஏன் அங்கு செல்ல வேண்டும். கண்ட நேரத்தில் கண்ட இடங்களுக்குச் சென்றால் நாங்கள் சென்ன செய்வது? என கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சுக்கு மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சரின் பேச்சை ஏற்க முடியாது. இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அரக ஞானேந்திரா, "நான் கூறிய கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகளைப் பிடிக்க போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: இன்னொரு உ.பியாக மாறிவரும் ம.பி : இஸ்லாமிய வியாபாரிகள் மீது கொலைவெறித் தாக்குதல்- அதிகரிக்கும் குற்றங்கள்!