India

"கொரோனா இரண்டாம் அலையே இன்னும் ஓயல..” : புள்ளி விவரங்களுடன் எச்சரிக்கை விடுத்த ஒன்றிய அரசு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவல் ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போதுதான் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,549 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 4 லட்சத்து 4 ஆயிரத்து 958 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவலே இன்னும் முடிவடையவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்தியாவில் ஜூன் 1-ஆம் தேதி 279 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு பதிவானது. தற்போது அந்த எண்ணிக்கை 57 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் ஓயவில்லை. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கேரளாவில் 10 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த 18 மாவட்டங்களில் 47.5% பாதிப்புகள் பதிவாகின்றன.

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில், கொரோனா தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

தற்போதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் மக்கள் எச்சரிக்கையுடனும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கோவாக்சின் திடீர் பற்றாக்குறைக்கு இதுதான் காரணம்” : போட்டு உடைத்த டாக்டர் அரோரா!