India

“பெட்ரோல் விலை கூடுனா சைக்கிள் ஓட்டுங்க; பிரச்னை இல்லைனா மகிழ்ச்சி இல்லை” - BJP தலைவர்களின் பலே பதில்கள்!

கொரோனா தொற்று நாட்டையே அச்சுறுத்திவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மக்களை கூடுதலாக வதைத்து வருகிறது ஒன்றிய அரசு.

பெட்ரோலின் விலை நூறைத் தாண்டி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் கூட இவ்வாறு விலையேறிக் கொண்டிருப்பது ஒன்றிய அரசின் மீது மக்களைக் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

வரியைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எரிபொருள் விலையைக் குறைக்கும் திட்டமே அரசிடம் இல்லாததுபோல நடந்துகொள்கிறது பா.ஜ.க அரசு.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் கேள்வியெழுப்பினால், அவர்கள் பொறுப்பற்ற தன்மையுடன் பதில் சொல்கிறார்கள். இது மக்களை மேலும் ஆத்திரத்திற்குள்ளாக்கி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஓம் பிரகாஷ் சக்லேச்சா. இவரிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதிலளித்த அவர், “வாழ்க்கையில் மிகவும் சிக்கலான தருணங்கள் நமக்கு மகிழ்ச்சியின் உன்னதத்தை உணர்த்துகின்றன. வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படாவிட்டால் நம்மால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது” எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல, கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜ.க எம்.பி.யான சித்தேஷ்வர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, “இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். சைக்கிள் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது, சிக்கனமானது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க பிரதிநிதிகளின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

Also Read: “காவிரி தமிழ்நாட்டின் வாழ்வுரிமை; மேகதாது அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம்": முதலமைச்சர் பேச்சு!