India

“பிரான்ஸில் உள்ள இந்தியாவின் ரூ.176 கோடி சொத்துக்கள் முடக்கம்?” : பாதுகாக்கத் தவறி கோட்டைவிட்ட மோடி அரசு!

வரிபிரச்சனையில் பிரான்ஸில் உள்ள இந்தியாவிற்குச் சொந்தமான 176 கோடி ரூபாய் மதிப்பிலான 20 சொத்துக்களை முடக்க அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி என்ற நிறுவனம் பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கெய்ர்ன் எனெர்ஜி என்ற எண்ணெய் நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு, தனது பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்திற்கு மாற்றியது. ஆனால், இந்த பங்குகளை மாற்றியதால் முதலீட்டு ஆதாயத்தை கெய்ர்ன் இந்தியாவில் உள்ள கெய்ர்ன் நிறுவனம் அடைந்துள்ளதாக கூறி, அந்த நிறுவனத்திற்கு ரூ.10,247 கோடி வரி விதித்து இந்திய வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் கெய்ர்ன் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியும் அந்நிறுவன பங்குகளை விற்றும் வரி வசூலில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக கெய்ர்ன் நிறுவனம் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையில், இந்த விவகாரம் வரி பிரச்சனை அல்ல என்றும் முதலீடு தொடர்பானது என்றும் ரூ.10,247 கோடி வரி விதித்தது நியாயமில்லை என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கெய்ர்ன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.12,700 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் போனதால், இந்திய அரசின் சொத்துக்களை முடக்கி இழப்பீட்டை ஈடுசெய்யும் முயற்சியில் இறங்கியது கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம். இதனையடுத்து பிரான்ஸில் உள்ள ரூ.ரூ.176 கோடி மதிப்பிலான இந்திய அரசின் 20 சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அந்நாட்டில் உள்ள சொத்துக்களை இந்திய அரசால் விற்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக தங்களுக்கு எந்தவித நோட்டீஸோ அல்லது நீதிமன்ற உத்தரவோ வரவில்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு அலட்சியம் காட்டுவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

சீத்தாராம் யெச்சூரி

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உள்நாட்டில் பொதுச் சொத்துக்களை சூறையாடுவது மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் சொத்துக்களை பாதுகாக்கவும் மோடி அரசால் முடியவில்லை; தேசிய பாதுகாப்புக்கே இந்த ஆட்சி ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்று சாடியுள்ளார்.

Also Read: மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!