India

“மாடுகளைக் கடத்தியதாக கூறி இஸ்லாமியரை சுட்டுக்கொலை செய்த இந்துத்வா கும்பல்”: உ.பியில் தொடரும் அட்டூழியம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்பர்கள் மீதும், மாடுகளை ஏற்றிச் செல்பவர்கள் மீதும் இந்துத்துவா அமைப்பைச் சேர்த்தவர்கள் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம், மதுராவின் கோசி கலன் காவல்நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆறு பேர் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர், மாடுகளைக் கடத்திச் செல்வதாகக் கூறி ஆறு பேர் மீது அவர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில் குண்டடிபட்டு இறந்தவர் புலந்த்ஷாஹர் மாவட்டம், ஆர்னியா கிராமத்தைச் சேர்ந்த ஷெரா என்பது தெரியவந்தது. மேலும் காயமடைந்த மற்ற 5 பேரும் அனிஷ், ரஹ்மான், ஷாஜாத், கதீம் மற்றும் சோனு எனவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பசு வதை தடைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஆறு பேர் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also Read: “தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் மரணம் நிகழவில்லை” - எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!