India

“தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் மரணம் நிகழவில்லை” - எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 3,46,784 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பரவலாக போடப்படுகின்றன. ஸ்புட்னிக் வி தடுப்பூசி இன்னும் பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்தியாவில் தற்போது 17 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது வரை 4 கோடிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிப்படையும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. இதையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர்.

இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 53 பேர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தது.

பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தாலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்ற நோயாளிகளைப்போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டாலும் யாருக்கும் மரணம் நிகழவில்லை.” எனத் தெர்விக்கப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய இந்த ஆய்வின் முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தடுப்பூசியின் செயல்திறன் குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் கிளப்பப்படும் நிலையில், ஐ.சி.எம்.ஆர் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறனை கண்டறிய ஆய்வு” - ICMR முடிவு!