India

மாநில அரசுக்கு நேரடியாக தடுப்பூசி தரமுடியாது : கைவிரித்த மாடர்னா, பைசர் - என்ன செய்யப்போகிறது மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கத்தால் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், தினசரி 4 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்புகள் பதிவாகி வருவதால் சடலங்களை எரிக்க அவர்களது உறவினர்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையின் போதே இந்திய மக்களின் தேவைக்கு ஏற்ப மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யாததால் தற்போது தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாத நிலையிலேயே 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. மேலும் மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்து, இதன் மூலம் தடுப்பூசிகளுக்கான செலவுகளை மாநில அரசுகள் மீது மறைமுகமாகச் சுமத்தி வேடிக்கை பார்த்து வருகிறது மோடி அரசு.

தங்கள் மக்களின் உயிர் பாதுகாப்பை உணர்ந்து மாநில அரசுகள் நேரடியாக சர்வதேச டெண்டர் மூலம் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் மார்டனா மற்றும் பைஸர் நிறுவனத்திடம் தடுப்பூசிகளை வாங்க கோரியிருந்தனர். இந்நிலையில் அந்த நிறுவனங்கள் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய மறுத்துவிட்டது. மேலும் மாநில அரசுகளுக்கு விற்க முடியாது மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக பேசி தடுப்பூசி விற்போம் என தெரிவித்துள்ளது.

மார்டனா, பைஸர் நிறுவனங்களின் இந்த முடிவால் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் காலதாமதம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், அப்போது தான் மூன்றாவது கொரோனா அலையிலிருந்து தப்பிக்க முடியும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Also Read: இந்தியாவில் மஞ்சள் பூஞ்சை தொற்று.. கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை விட ஆபத்தானதா? - கொரோனாவை பின்தொடரும் கோரம்!