India
ஒரே பெண்ணால் 33 பேருக்கு கொரோனா... கும்பமேளாவில் பங்கேற்றதால் வந்த வினை... அச்சத்தில் பெங்களூரு மக்கள்!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இந்தியா முழுவதுமே கொரானாவால் சுகாதார கட்டமைப்பே சிதைந்துகிடக்கிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனா தொற்றைவிட இரண்டாம் அலை கொடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா தொற்றால், குடும்பம் குடும்பமாக மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் கொரோனா பரவும் சமயத்தில் பல மாநிலங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்றது கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிட்டது எனக் கருதப்படுகிறது. உதாரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர்.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கும்பமேளாவில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்குத் தொற்று உறுதியானது.
பின்னர், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 18 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அந்த பெண்ணின் மருமகளும், மனநல மருத்துவரான ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணின் மருமகள் வேலை பார்த்து வந்த மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பேருக்கும், மருத்துவமனை ஊழியர்கள் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பிய பெண்மணியிடமிருந்து குடும்பத்தினர், மருத்துவமனை நோயாளிகள், ஊழியர்கள் என மொத்தமாக 33 பேருக்கு கொரோனா பரவியுள்ளது பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்