India

‘சிகரெட்’ மூலம் 17 பேருக்கு கொரோனா தொற்று : ஹைதராபாத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதனால் இந்த மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் கிடைக்காததால் பல இடங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், டீக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்ததில் 17 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மூலம் 17 பேருக்குத் தொற்று பரவ சிகரெட் ஒன்று காரணமாகியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்நிறுவனம் ஊழியர்களுக்கு எப்படி கொரோனா பாதித்தது என விசாரணை நடத்தியது. அப்போது ஊழியர்கள் அனைவரும் மார்க்கெட்டிங் மேனேஜர் பெயரையே தெரிவித்துள்ளனர். பின்னர் நிர்வாகம் அந்த மார்க்கெட்டிங் மேனேஜரிடம் எப்படி உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என கேட்டுள்ளனர்.

அப்போது அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன் டீக்கடையில் டீ குடிக்க சென்றபோது, நண்பர் ஒருவர் வந்தார். அவர் அடிக்கடி லேசாக இருமிக்கொண்டே இருந்தார். அப்போது, அவர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை வாங்கி, என்னிடம் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தேன். ஒருவேளை அவருக்கு கொரோனா தொற்றி இருக்கலாம். அவரிடமிருந்து எனக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே நபர் மூலமாக 17 பேருக்கு கொரோனா தொற்று பரவிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: “காப்பாற்றவும் வக்கில்லை.. எரிக்கவும் வழியில்லை”- கொரோனாவால் பலியானவரின் சடலத்தைக் கடித்துக் குதறிய நாய்!