India

“பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதம்... ஊரடங்கு அமலாவது நம் கையில் தான் உள்ளது” - பிரதமர் மோடி உரை!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.45 மணிக்கு உரையாற்றினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய மோடி, “கொரோனா காலத்தில் கடுமையாக உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கு எனது மிகப்பெரிய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இக்கட்டான சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் கடுமையான துயரத்தை அனுபவிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது உங்களது வருத்தங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

கொரோனா இரண்டாவது அலை சூறாவளி போல் நாட்டைத் தாக்கி வருகிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா பரவலால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. அந்தத் தட்டுப்பாட்டை நிச்சயமாக அரசு பூர்த்தி செய்யும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது உற்பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு சம்பந்தமான எந்த ஒரு வசதிகளும் நம்மிடம் இல்லாமல் இருந்தது. முகக்கவசம் தயாரிப்பு முதல் வெண்டிலட்டர் தயாரிப்பு வரை கடந்த சில மாதங்களில் தான் நாம் பெரிய அளவில் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.

ஒவ்வொரு இந்தியரும் தனது சக இந்தியருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இளைஞர்கள் கொரோனா தடுப்பிற்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய முன்வர வேண்டும்.

இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது.

மே 1ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஏழைகள், நடுத்தரப் பிரிவினருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடரும்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுப்பது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் பொறுப்பு. நாடு முழுவதும் பொது முடக்கம் வருவதை தடுக்கும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது.

பொது முடக்கம் என்பது கடைசி வாய்ப்புதான். பொது முடக்கத்தை அமல்படுத்தும்போது மாநில அரசுகள் அதனை கடைசி ஆயுதமாக தான் கையாள வேண்டும்.” என உரையாற்றினார்.

Also Read: “புயல் வேகத்தில் தாக்குகிறது கொரோனா இரண்டாம் அலை... ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு” - பிரதமர் மோடி உரை!