India

“சாதியாவது.. மதமாவது..” - கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவும் மசூதிகள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதி, கல்யாண் மற்றும் பிவாண்டி உள்ளிட்ட பல மசூதிகளில் இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சித்திக், மசூதிகளின் வாயிலாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவி வருகிறார்.

இதுகுறித்துக் கூறியுள்ள சித்திக், “கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளை கிடைப்பதில்லை, பலர் வீடுகளிலேயே சிகிச்சை பெறுகிறார்கள் என்பதால், ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம். மக்களில் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் இலவசமாக வழங்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் மசூதியில் 50 படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த ஆண்டு மும்பையின் பிவாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மசூதிகளின் ஏற்பாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: வட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை : கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழப்பு!