India

‘லேடி சிங்கம்’ என்றழைக்கப்பட்ட வனத்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை - நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ளது மெல்காத் புலிகள் வனச் சரணாலயம். இங்கு வன அதிகாரியாக தீபாலி சவான் என்ற பெண் பணியாற்றி வந்தார். வனத்துறையில் நடைபெறும் அனைத்து அட்டூழியங்களையும் தனி நபராக நின்று துணிச்சலுடன் எதிர்கொள்வார். முரடர்கள், அரசியல்வாதிகள் என யார் மிரட்டலுக்கும் அஞ்சாதவர் தீபாலி சவான்.

இதனால் இவரை மக்கள் அனைவரும் அன்போடு ‘லேடி சிங்கம்’ என்று அழைத்தனர். கண்ணில் தெரிந்த எதிரிகளை எதிர்கொண்டவரால், அதிகாரி என்ற போர்வையில் இருக்கும் கயவர்களை எதிர்கொள்ள முடியவில்லை.

இதே வன சரணாலயத்தில் உயரதிகாரியாக இருக்கும் வினோத் சிவக்குமார் என்பவர் தீபாலிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அடிக்கடி மது குடித்துவிட்டு, தீபாலியை பணி செய்யவிடாமல் தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். வினோத் சிவக்குமாரின் நடவடிக்கையால், தீபாலி சவான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி அமராவதியில் உள்ள வனத்துறை குடியிருப்பில், தீபாலி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது மகாராஷ்டிர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தீபாலி சவான் தற்கொலை செய்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். இதில் "என்னை மாதத்திற்கு ஒரு முறை கூட குடும்பத்தாரைச் சந்திக்க விடவில்லை. இரவு நேரத்தில் தன்னை தனியாகச் சந்திக்க வருமாறும் அழைத்தார். கொல்காத் புலிகள் காப்பகத்தில் மங்கியா கிராமத்தில் சில உள்ளூர்வாசிகள் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தை வைத்து தன்னை மிரட்டியது குறித்து சிவக்குமாரிடம் கூறினேன். ஆனால், எனக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதில் என்னை எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் சிறைக்கு அனுப்பிவிடுவேன் என சிவக்குமார் மிரட்டினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தீபாலியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த வனத்துறை அதிகாரி வினோத் சிவக்குமாரை போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மெல்காத் புலிகள் காப்பகத்தின் ஃபீல்டு ஆபிசர் சீனிவாசரெட்டி தலைமறைவாகியுள்ளார். இவரிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Also Read: “கொரோனா பரவல் இப்படியே தொடர்ந்தால் சுகாதாரத்துறை திணறிவிடும்” - மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு!