India

“கொரோனாவால் வேலைப்பளு அதிகம்.. என்னால முடியல”- அரசின் மெத்தனத்தால் தொடரும் மருத்துவர்கள் உயிர்பலி!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்ஸ்வரூப் சவுத்ரி. இவர் கிதார் நகரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் ஜமுய் மாவட்ட கொரோனா தடுப்பூசி பிரிவின் பொறுப்பாளராகவும் ராம்ஸ்வரூப் இருந்துள்ளார்.

இந்நிலையில், செவ்வாக்கிழமை காலை அவரது வீட்டில் ராம்ஸ்வரூப் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலிஸார், அவரது வீட்டில் சோதனை செய்தபோது, ராம்ஸ்வரூப் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில், வேலை அழுத்தம் மற்றும் சுகாதார பிரச்சினைகளே தன்னை தற்கொலை முடிவுக்குத் தள்ளியதாக அவர் எழுதியுள்ளார்.

மேலும், “கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு எனது மனம் ஒருநிலையில் இல்லை. நினைவாற்றல் இழப்பு மற்றும் தூக்கமின்மையால் மிகவும் அவதிப்பட்டேன். இதனால் என்னால் சரியாக வேலை செய்ய முடியவில்லை” என அந்த கடிதத்தில் ராம்ஸ்வரூப் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் கூறுகையில், சுகாதாரத்துறை நிர்வாகம் அதிகமான வேலைப்பளுவால்தால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோன்று, மைசூருவில் நஞ்சங்குட் தாலுகா சுகாதார அதிகாரியாக நியமிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் அதிக வேலைப்பளுவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும், கொரோனா காலங்களில் வேலைப்பளு காரணமாகவும், மன அழுத்தத்தாலும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவர்களுக்கு இன்னும் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: இதுதான் குஜராத் மாடலா மிஸ்டர் மோடி?: 2 ஆண்டுகளில் 13,000 குழந்தைகள் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!