India

“கூலி கேட்டால் காலை உடைக்கும் போலிஸ்” - தலித் தொழிற்சங்கவாதிக்கு நடந்த கொடுமை!

மஜ்தூர் அதிகார் சங்கதன் என்ற தொழிற்சங்கத்தின் தலைவர் ஷிவ் குமார். இவர் தலித் தொழிற்சங்க செயற்பாட்டாளரும் கூட. இவரும் மற்றொரு செயல்பாட்டாளரான நவ்தீப் கவுரும் சேர்ந்து ஊதியம் வழங்காத தொழிற்சாலை முன்பு, தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, காவல்துறையினர் இருவர் மீதும் பணம் பறித்தல், கொள்ளை மற்றும் கொலை முயற்சி ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குப் பதிவு செய்து கடந்த ஜனவரியில் தொழிற்சங்க தலைவர் ஷிவ் குமாரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறையில் ஷிவ்குமாரை காவல்துறையினர் சித்திரவதை செய்வதாகக் கூறி, அவரின் தந்தை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 19ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த மனு மீது விசாரணை நடத்தி ஷிவ் குமாரின் மருத்துவ அறிக்கையை அளிக்க உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 20ம் தேதி ஷிவ்குமாரை மருத்துவக்குழு பரிசோதனை செய்தது. பின்னர் இந்தக் குழு தயாரித்த அறிக்கையில், ஷிவ் குமாரை பலமான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதால், அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் உடலில் எட்டு காயங்கள் இருக்கிறது என்றும் அவை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஷிவ் குமாரின் மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு ஷிவ் குமார் சிகிச்சைக்காக வந்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தினமும் மூன்று முறை காவல்துறை அதிகாரிகளால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன். மேலும் மனரீதியான துன்புறுத்தலும் நடந்தது. இரவு முழுவதும் என்னை தூங்கவிடாமல் சித்ரவதை செய்தனர். வெள்ளைத் தாளில் என்னிடம் வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்கினர்" எனத் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் சிறையில் இருந்து நேராக மருத்துவமனைக்கு வந்துள்ளேன். சிறையில் என் ஆன்மாவை உடைக்க பார்த்தார்கள். ஆனால் அவர்களால் என் காலை மட்டுமே உடைக்க முடிந்தது. இதனால் நான் மேலும் பலமாகிவிட்டேன். என் போராட்டம் இத்தோடு முடிவடையாது. விரைவில் போராட்டக்களம் வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிப்ரவரி 12ம் தேதி நவ்தீப் கவுருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Also Read: விவசாயிகள் போராட்டத்திற்கு மகுடம் சூட்டிய TIME இதழ் : பெண்களின் படத்தை முகப்பில் வெளியிட்டு மரியாதை!