India

இனி OTT தளங்களுக்கு சென்சார்: சமூக வலைதளங்களில் அவதூறுகள், சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிட்டால் நடவடிக்கை

ஓ.டி.டி. தளங்களைக் கட்டுப்படுத்த சுய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் புதிய ஓ.டி.டி மற்றும் சமூக ஊடக விதிமுறைகளை வெளியிட்டனர்.

ஓ.டி.டி மூலம் தற்போது திரைப்படங்கள், தொடர்கள் அதிகமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றை கண்காணிக்க திரைப்பட தணிக்கை போன்று எந்த ஒரு அமைப்பும் இல்லை என்பதால் இவற்றை ஒழுங்குமுறை படுத்துவதற்கு சுய ஒழுங்குமுறை அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியையோ, உயர்நீதிமன்ற நீதிபதியையோ அல்லது பிரபலமான நபர் ஒருவரையோ நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த அமைப்பு 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் ஏழு வயது, பதிமூன்று வயது, 16 வயது மற்றும் முதியவர்களுக்கானது என்று வயதுக்கேற்ப ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் அவை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதேபோன்று யூடியூப் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியிடுவோர் தங்கள் குறித்த விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர். ஏற்கனவே பிரஸ் கவுன்சில் விதிமுறைகளுக்கு உட்பட்டே இனிமேல் அவர்கள் செயல்படமுடியும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் வெளியாகக் கூடிய பெண்களுக்கு எதிரான படங்கள், கருத்துக்கள் குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் அதனை நீக்க வேண்டும். மற்ற புகார்கள் தொடர்பாக 24 மணி நேரத்தில் புகார்களை பதிவு செய்ய வேண்டும்.

15 நாட்களுக்குள் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் நீதிமன்றங்கள் தகவல் கேட்டால் 15 நாளில் சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். வழங்காவிடில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும், தவறான கருத்துக்களை யாரேனும் வெளியிட்டால் முதலில் வெளியிட்ட நபர் யார் என்பதை சமூக ஊடக நிறுவனங்கள் அரசின் விசாரணை அமைப்புகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் தனி அதிகாரிகளை மூன்று மாதத்தில் நியமிக்க வேண்டும். மாதாந்திர புகார் விவரங்களையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், வன்முறையை தூண்டுவது, தீவிரவாத செயல்களுக்கு சமூகங்களை பயன்படுத்துவது, பொய் செய்திகளை பரப்புவது, நிதி சம்பந்தமான மோசடிகள் போன்றவற்றை தடுக்கும் நோக்கிலேயே இந்த விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவில் WhatsApp-ஐ 53 கோடி பேரும், YouTube-ஐ 44.8 கோடி பேரும், Facebook-ஐ 41 கோடி பேரும், Instagram-ஐ 21 கோடி பேரும், Twitter-ஐ 1.75 கோடி பேரும் பயன்படுத்தி வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.