India

இந்தியாவில் தனியாத கொரோனா பரவல்.. மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு.. பீதியில் உறைந்த மக்கள்!

2019ம் ஆண்டு சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை முடக்கியது. இந்த வைரஸால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து மக்களை பாதுகாப்பதற்காக, தடுப்பூசி தயாரிக்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கொரோனாவின் கோரப்பிடி இன்னும் முற்றாக விலகவில்லை. இன்னும் உலகமே கொரோனா வைரஸ் உடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தாலும், தற்போது சில மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை வந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த 6 மாநில அரசுகளையும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் இன்று இரவு முதல் முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும் என்றும், விதிகளைப் பின்பற்றாவிட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா சிகிச்சைக்கு HIV PPE கிட் வழங்கிய அதிமுக; ஊழல் துறையான சுகாதாரத் துறை” - டாக்டர்கள் சங்கம் சாடல்!