India

பாகிஸ்தான் ஆதரவாளரா ரிஹான்னா? - விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் வதந்தி பரப்பிய கும்பல்!

மோடி அரசு தொடந்து புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இது தொடர்பாக பல வெளிநாட்டு பிரபலங்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டு வந்தனர்.

அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் ஆதரவு தெரிவித்த பல வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களை மோடி அரசு களம் இறக்கியது. குறிப்பாக சச்சின் தொடங்கி பாலிவுட் நடிகர்கள் வரை கண்டனக் குரலை எழுப்பி வந்தனர்.

தற்போது ரிஹான்னா பாகிஸ்தான் கொடியை ஏந்தியது போல் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் இவர் பாகிஸ்தான் ஆதரவாளர் என்றும் இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகிறார் என்றும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி இந்தியாவுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும், சமூக வலைதளத்தில் பா.ஜ.க ஆதரவாளர்களால் தகவல் பரப்பப்பட்டது.

ஆனால் உண்மையில் அந்த புகைப்படத்தில் ரிஹான்னா பாகிஸ்தான் கொடியுடன் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று கூகுள் சர்ச் மூலம் தெரியவந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது வெஸ்ட் இண்டீசுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கொடியை ஏந்தியிருந்தார். போட்டோஷாப் மூலமாக பாகிஸ்தான் கொடியை அவர் ஏந்தியிருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பியவர்கள் தற்போது அடங்கியுள்ளனர்.

Also Read: ரிஹான்னா கருத்துக்கு எதிர்ப்பு - விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.கவினரின் குரலை ஒலிக்கிறாரா சச்சின்?