India

21 வயதில் திருவனந்தபுரம் மேயர் - பதவியேற்றார் ஆர்யா ராஜேந்திரன் !

கேரளாவின் இன்று 6 மாநகராட்சி களுக்கான மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம், கண்ணூர் ஆகிய மாநகராட்சிகளில் மேயர் தேர்தல் நடைபெற்றாலும், மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் தேர்தல் அனைத்து தரப்பு மக்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே குறைந்த வயது கொண்ட மேயராகவும் கல்லூரி மாணவியாகவும் காணப்பட்டதால் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தேர்தல் துவங்கியபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்யா ராஜேந்திரனும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேரி புஷ்பமும், பா.ஜக. சார்பில் சிமி ஜோதிஷம் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் 99 வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்த நிலையில், ஒரு வாக்கு செல்லாத வாக்காக காணப்பட்டது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்யா ராஜேந்திரன் 54 வாக்குகளும் பா.ஜ.க வேட்பாளர் சிமி ஜோதிஷ் 35 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் மேரி புஷ்பம் 9 வாக்குகளும் பெற்றனர். ஆரியா ராஜேந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றிபெற்ற தருணத்திலேயே மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பியதோடு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்தியாவிலேயே குறைந்த வயது மேயராக வெற்றி பெற்ற ஆர்யா ராஜேந்திரன் அங்கு அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருவனந்தபுரம் மாநகராட்சி முன்னாள் மேயர்களான ஜெயன் பாபு, சிவன் குட்டி, ஸ்ரீகுமார், பிரசாந்த் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

Also Read: “திருவனந்தபுரம் மேயராகும் 21 வயதான மாணவி” : இந்தியாவின் இளம் மேயரை தேர்வு செய்த சி.பி.ஐ.எம்!