India

“புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை” - மத்திய நிபுணர் குழுவினர் தகவல்!

இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 75 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 2,92,518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், “நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளின் பட்டியலைச் சேகரித்து அவர்களுக்கு கட்டாயம் கொரோனா சோதனை செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

அதில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மாதிரியை புனேவிலுள்ள தேசிய வைரஸ் ஆய்வகத்துக்கு அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பவேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசுகையில், “இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா குறித்து, அங்குள்ள ஆராய்ச்சி நிறுவனத்துடன் பேசியுள்ளோம். இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை.

உருமாற்றம் பெற்ற வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்பதை புரிந்துகொண்டோம். தற்போது உருவாக்கப்படும் தடுப்பூசி முயற்சிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது” என்று தெரிவித்தார்.

Also Read: ”உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்”: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்!