India

"வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவையே”- வாபஸ் பெற வலியுறுத்தி பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு கடிதம்!

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 பொருளாதார வல்லுநர்கள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் எனக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களோடு வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் தீர ஆய்வு செய்ததில், இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் இல்லை. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு எதிரான வகையிலேயே இருக்கின்றன என அக்கடிதத்தில் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நாட்டின் சிறு விவசாயிகள் பயனடைய வேண்டுமெனில் விவசாயிகளின் வருமானம் உயர வேண்டுமெனில் வேளாண் பொருட்களின் விற்பனை சந்தையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களில் அதற்கான எந்த அம்சங்களும் இல்லை.

வேளாண் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும் வகையில் இந்தசட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சந்தைகளை கொண்டு வருவது சிறு விவசாயிகளின் நலனைப் பாதிக்கும்.

ஒப்பந்த விவசாயத்தில் சிறு விவசாயிகளுக்கு எதிராக பெரு நிறுவனங்கள் களமிறங்கும்.மாநில அரசு விதிமுறைகளின் கட்டுப்பாடுகளுக்குள் பெரு நிறுவனங்கள் வரும் வகையில் சட்டங்கள் இல்லாததால், வேளாண் சந்தையில் பெரு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறான காரணங்களை குறிப்பிட்டு விவசாயிகளின் நலனை பாதிக்கும் இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அக்கடிதத்தில் பொருளாதார வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: யாரை பாதுகாக்க அவசர அவசரமாக இந்த வேளாண் சட்டத்தை கொண்டு வந்தீர்கள்? - மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!