India

10% உள்ஒதுக்கீடு: மாணவர்களை பகைத்துக்கொண்டால் போராட்டம் வெடிக்கும் - கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை!

புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோது அது உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து கட்சிகளும், புதுச்சேரி அரசு அறிவித்துள்ள இந்த உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. இது குறித்து முடிவு எடுக்க, மத்திய அரசை சந்திக்க வருவதாகவும் அனைத்து கட்சி தலைவர்களும் கூறி உள்ளார்கள்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, இந்த விவகாரம் பற்றி, மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். உள் ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. வேண்டும் என்றே காலதாமதம் செய்வதற்காக துணைநிலை ஆளுநர், மத்திய அரசுக்கு இந்த கோப்பினை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக சட்ட ரீதியாக சந்திக்கவும் ஆலோசித்துள்ளோம்.

துணைநிலை ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து மேல் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களை பகைத்துக் கொண்டால் அது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்ட வடிவமாக வடிவமைத்து அதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதனையும் துணைநிலை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த சட்டத்தையும் அமல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

Also Read: அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு: 2009ம் ஆண்டே சட்டமாக நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர்!