India
“விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு வட்டியை உடனடியாக தள்ளுபடி செய்க” - கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டியையும் அபராத வட்டியையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சலுகை வழங்கப்பட்டது. ஆனால், அந்த சலுகையை பயன்படுத்தி கடன் தவணையை செலுத்தாத ஆறு மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ரூபாய் 2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சகம் சில சலுகைகளை கேள்வி பதில் பாணியில் கடந்த 26-ம் தேதி வெளியிட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர், டிராக்டர் கடன் பெற்றவர்கள் மற்றும் விவசாய கடன் பெற்றவர்கள் வட்டிக்கு வட்டி சலுகைக்கு தகுதியான எட்டு பிரிவுகளின் கீழ் வரமாட்டார்கள். எனவே, பயிர், டிராக்டர் கடன் உள்ளிட்ட வேளாண் கடன்கள் வட்டிக்கு வட்டி ரத்து சலுகை பொருந்தாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
சிறு, குறு தொழில் நிறுவன கடன், கல்விக்கடன்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் ஆகியவற்றின் வட்டிக்கு வட்டி ரத்து வழங்கப்பட்ட திட்டத்தில் விவசாய கடன்களை மத்திய அரசு சேர்க்காமல் விட்டுவிட்டது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
ஏற்கெனவே, கடுமையான கடன் தொல்லை காரணமாக கடும் இன்னலில் சிக்கியுள்ள விவசாயிகள் மத்திய அரசின் அறிவிப்பால் கடும் சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிவுடன் கவனிக்காத மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களை ரத்து செய்திருக்கிறது. ஆனால், விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யாமல் இருப்பது விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
விவசாயிகள் கடனை ரத்து செய்யாவிட்டாலும், கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆறு மாத காலத்திற்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். வட்டிக்கு அபராத வட்டி விதிப்பதையும் நிறுத்த வேண்டும். இத்தகைய சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்க மத்திய பா.ஜ.க அரசு முன்வர வேண்டும். அதற்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நிதி ஆதாரத்தை திரட்டி விவசாயிகளுக்கான கடனுக்குரிய வட்டியை ரத்து செய்ய வேண்டும். அதற்கான அபராத வட்டியை வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
மத்திய பா.ஜ.க அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களால் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை பறிக்கப்பட்டுள்ளது. இனி விவசாயிகளின் விளைபொருள்கள் விலையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களை சந்தைப்படுத்துவதில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்.
விளைபொருள்களை விற்பதற்கான சந்தைகள் மூடப்பட்டுள்ளன. உற்பத்தி செய்த விளைபொருள்களை எங்கே விற்பது? யாருக்கு விற்பது? எப்படி விற்பது என்று தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். விவசாயிகள் கொடுமையான காலத்தை எதிர்நோக்கி வருகிறார்கள்.
எனவே, வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கொழுந்து விட்டு எரியும் போராட்ட சூழலில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டியையும் அபராத வட்டியையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி தள்ளுபடி செய்யப்படவில்லையெனில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!